நெல்லையில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற 63 பேர் கைது


நெல்லையில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற 63 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 8:30 PM GMT (Updated: 10 Sep 2021 8:30 PM GMT)

விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற 63 பேர் கைது

நெல்லை:
நெல்லையில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 63 பேரை போலீசார் கைது செய்தனர். 13 இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டன. 
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில்கள் முன்பு மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது. இதனால் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நெல்லை மாநகர பகுதிகளில் கோவில்கள் முன்பு மற்றும் வீதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து இந்து முன்னணியினர் நேற்று போராட்டம் அறிவித்திருந்தனர்.
63 பேர் கைது
அதன்படி நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் முன்பு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினார்கள். வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி, கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தடையை மீறி விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நெல்லை டவுனில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
13 சிலைகள் அகற்றம்
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதை தடுப்பதற்காக, சிலை கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு போலீசாருடன் இணைந்து கண்காணித்தனர். நெல்லை தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் கோவில் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசாரும், சிலை கண்காணிப்பு குழுவினரும் அகற்றினர்.
இதேபோல் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் முன்பாக வைத்திருந்த விநாயகர் சிலை, டவுன் விநாயகர் கோவில் முன்பு வைத்திருந்த சிலை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 13 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை அகற்றினர். சிலைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

Next Story