வள்ளியூர் அருகே பயங்கரம்: குடும்ப தகராறில் விவசாயி வெட்டிக்கொலை மகன் கைது


வள்ளியூர் அருகே பயங்கரம்: குடும்ப தகராறில் விவசாயி வெட்டிக்கொலை மகன் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 8:35 PM GMT (Updated: 2021-09-11T02:05:50+05:30)

குடும்ப தகராறில் விவசாயி வெட்டிக்கொலை

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சமுத்திரம் (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி மாடத்தி.
இவர்களுடைய மகன் கணேசன் (43). திருமணமாகாத இவர் கடந்த சில ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். கணேசன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
வெட்டிக்கொலை
சமுத்திரத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று மதியம் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று மனைவி மாடத்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.
இதனைப் பார்த்த மகன் கணேசன் ஆத்திரமடைந்து வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து தந்தை சமுத்திரத்தின் தலையில் பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 கைது
இதனைப் பார்த்த மாடத்தி அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தார். தந்தையை கொலை செய்த கணேசனும், தந்தை இறந்தது கூட தெரியாமல் ‘அப்பா, அப்பா’ என்று புலம்பியவாறு இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த சமுத்திரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். குடும்ப தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story