விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது


விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 10 Sep 2021 10:45 PM GMT (Updated: 10 Sep 2021 10:45 PM GMT)

அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

திருப்பூர்
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் சந்திப்பு பகுதியில் தனியார் இடத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் வீட்டில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினர் எடுத்து வந்து உடைத்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று நினைத்து மக்களை சில அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். முதல்-அமைச்சரின் வீட்டில் உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சில அரசு அதிகாரிகள் தவறாக முதல்-அமைச்சரை வழிநடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா இருந்தது. ஊர்வலம் நடத்தாமல் தனித்தனியாக விநாயகர் சிலைகள் வைத்து எடுக்கப்படும் என்று தெரிவித்து அதன்படி செய்தோம். இந்த ஆண்டும் அதைத்தான் தெரிவித்து இருந்தோம்.
நல்ல புத்தியை கொடுப்பார்
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைக்க அனுமதித்தால் அதன்படி செய்ய தயாராக இருந்தோம். காவல்துறையுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நடத்தக்கூடாது என்று இந்த அரசு செயல்பட்டது.
விநாயகர் இந்து மக்களின் நம்பிக்கையாக, பொதுவாக இருக்கிறார். எந்த காரியத்தை செய்தாலும் விநாயகரை வழிபட்டுத்தான் செய்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் பொதுமக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்த அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அனுமதிக்கவில்லை. இதை இந்து முன்னணி கண்டிக்கிறது. அவர்களுக்கு விநாயகர் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இந்த அரசுக்கு விநாயகர் நல்ல புத்தியை கொடுப்பார்.
விநாயகர் வழிபாடு எழுச்சி
கடந்த ஆண்டு 5 லட்சம் சிலைகள் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த வருடம் 10 லட்சம் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிடப்பட்டது. விநாயகர் சிலைகளை மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பிரதிஷ்டை செய்ய ஆர்வம் செலுத்தியுள்ளனர். அரசின் கட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சியோடு விநாயகர் சிலைகளை வீடுகளில் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். அந்த வகையில் விநாயகர் வழிபாடு எழுச்சியை ஏற்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். திருப்பூர், கோவை பகுதிகளில் விநாயகர் சிலைகளை ஒரு நாள் வைத்து விசர்ஜனம் செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story