சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை ஐகோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 11:53 PM GMT (Updated: 2021-09-11T05:23:20+05:30)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

சென்னை,

திருவள்ளூரை சேர்ந்தவர் விக்டர் ஜான். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பம் அடைந்த இந்த சிறுமியின் கருவை கலைக்க நண்பர்கள் சிலருடன் சேர்ந்து விக்டர் ஜான் முயற்சி செய்துள்ளார். ஆனால் டாக்டர்கள் யாரும் கருவை கலைக்க சம்மதிக்காததால், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

விடுதலை

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விக்டர் ஜான், அவருக்கு உதவிய செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு, பாதிக்கப்பட்ட பெண் மைனர் பெண் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட சிறுமி 1998-ம் ஆண்டு பிறந்தார் என்ற பிறப்பு சான்றிதழ் உள்ளது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 18 வயது ஆகவில்லை. அவர் மைனர் சிறுமி தான். மேலும், சிறுமியின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக விக்டர் ஜான் தரப்பில் செய்யப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது.

10 ஆண்டு சிறை

எனவே, விக்டர் ஜானை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்.அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை சிறுமிக்கு பிறந்த குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

நீதிபதிகளுக்கு பயிற்சி

விக்டர் ஜானுக்கு உதவியதாக கூறப்படுபவர்களை விடுதலை செய்த கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்கிறேன்.

போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கும், அரசு தரப்பு வக்கீல்களுக்கும் போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருந்தேன். அந்த உத்தரவை மீண்டும் இந்த வழக்கிலும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story