ஆரணியில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி, 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு


ஆரணியில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி, 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2021 11:30 AM IST (Updated: 11 Sept 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஓட்டலை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆரணி

ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஓட்டலை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (40). இவர் இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும், சரண் (14) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த 8-ந் தேதி இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்றனர். 

பின்னர் சிறுமி லோஷினிக்கு உடல் நலம் பாதிப்பு அதிகமானதால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

24 பேர் பாதிப்பு

மேலும் அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் திலகவதி (55), சந்தியா ( 24), பாஸ்கரன் (32), டிஷ்ணு (17), யாகூப் (4), சீனிவாசன் (19), பாத்திமா (27) ஆகிய 7 பேரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திலகவதி, சந்தியா, பாஸ்கரன், சீனிவாசன் ஆகிய 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோன்று ஆரணி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் லோகேஷ் (16), மகள் மோனிகா (15), சங்கர் என்பவரின் மகன் தமிழரசு (21), கிருஷ்ணமூர்த்தி மகள் கார்த்திகா (13) ஆகிய 4 பேரும் காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றதாக கூறப்படுகிறது.

ஓட்டலுக்கு சீல் வைப்பு

சிறுமி லோஷினி இறந்தது குறித்து ஆரணி தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தரணிகுமரன், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவ ஓட்டலில் உணவு மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தினார். ஆரணி நகர போலீசார் அந்த ஓட்டலுக்கு ‘சீல்’ வைத்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் ராஜவிஜயகாமராஜ், வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர். ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் ஆரணி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 7 பேர் பாதிப்பு

ஆரணி ஓட்டலில் அசைவு உணவு சாப்பிட்ட 21 நபர்கள் ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் அதே ஓட்டலில் சாப்பிட்ட அஜித் குமார் (26), பாலமுருகன் (20), வினோத் (24), வீரா (23), உத்தமன் (38), சுமதி (30), மகேந்திரன் (31) ஆகிய 7 பேரும் உடல் உபாதைகள் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Next Story