நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தை வேறு கிராமத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து இந்த நெல் கொள்முதல் நிலையம் பக்கத்து கிராமமான மாளந்தூருக்கு மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த அந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை வேறு கிராமத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்பட்டு நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ள இந்த பகுதியில் 3 போக விளைச்சல் நடைபெறும். எனவே, இந்த கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து இயங்கினால் இந்த பகுதி விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று கூறினர்.
மேலும் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒருவாரம் ஆன நிலையில் வேறு கிராமத்துக்கு மாற்ற வேண்டிய காரணம் என்ன? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர். இங்கு அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செங்குன்றம் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளோம்.
எனவே இதே கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த நெல் கொல்முதல் நிலையத்தை இங்கிருந்து மாற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story