பூந்தமல்லி அருகே டாக்டர் வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை


பூந்தமல்லி அருகே டாக்டர் வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 11 Sept 2021 4:43 PM IST (Updated: 11 Sept 2021 4:43 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே டாக்டர் வீட்டில் 67 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர் (வயது 31). டாக்டரான இவர், நேற்று முன்தினம் பிறந்தநாள் விழாவுக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அடையாறு சென்றுவிட்டார்.

பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது மாடியில் இருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 67 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

டாக்டர் மனோஜ் பிரபாகர் தனது வீட்டில் விலை உயர்ந்த நாயை வளர்த்து வருகிறார். பிறந்த நாளையொட்டி நாய்க்கு பிரியாணி வைத்துவிட்டு அடையாறு சென்றனர்.

ஆனால் பிரியாணியை சாப்பிட்ட நாய், கொள்ளையர்கள் வந்தபோது அவர்களை பார்த்து சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிட்டதாக தெரிகிறது.

Next Story