நிபா, ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் பரிசோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி


நிபா, ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் பரிசோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி
x
தினத்தந்தி 11 Sept 2021 7:18 PM IST (Updated: 11 Sept 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நிபா, ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேனி:

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் சில மாதங்களாக குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தின் எல்லையில் இருந்து கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட பகுதிகள் தொடங்குகின்றன. இடுக்கி மாவட்டத்தில் தினமும் 800-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நிபா, ஜிகா ஆகிய வைரஸ்கள் கேரள மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் இந்த வைரஸ் பரவால் தடுக்க இருமாநில எல்லைப் பகுதிகளில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகள் தமிழக-கேரள இடையிலான போக்குவரத்து வழித்தடங்களாக உள்ளன. இதில், கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குமுளி மலைப்பாதையில் தமிழக எல்லை வரை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் இந்த 3 மலைப்பாதைகளிலும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து நோய் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த பணிகளை நேரிலும், இணையவழியிலும் கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பரிசோதனை

கேரள மாநிலத்தில் இருந்து சரக்கு வாகனங்களில் வருபவர்கள் மற்றும் கார், வேன், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி உள்ளார்களா? கொரோனா பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று வைத்துள்ளார்களா? என சோதனை செய்யப்படுகிறது. சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் ஜிகா, நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகே அவர்கள் தேனி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த வைரஸ்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குமுளி எல்லையில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்கள் மற்றும் இருமாநில எல்லைகளில் வரும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story