கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 11 Sept 2021 9:20 PM IST (Updated: 11 Sept 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்:
 சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

நேற்று அதிகாலை முதலே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக டைகர் சோலை முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 படகு சவாரி

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் வாகனங்களை நகர்த்த முடியாமல் நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

இதற்கிடையே கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். 

மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பொழுதை போக்கினர். இதேபோல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காக்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

 கூடுதல் கட்டணம் வசூல்

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. இதனை குறி வைத்து விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதேநேரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story