ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு சிறப்பு கண்காட்சி


ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு சிறப்பு கண்காட்சி
x
தினத்தந்தி 11 Sep 2021 4:09 PM GMT (Updated: 2021-09-11T21:42:14+05:30)

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

ஊட்டி,

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில் மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு, பாடல்கள், கவிதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. 

மேலும் அவர் பிறந்த வீடு, நினைவு இல்ல புகைப்படங்கள் இடம் பெற்றது. இதனை கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் விளக்கி கூறினார். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி நிறைவடைகிறது.

தொடர்ந்து அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது. அதில் இந்தியாவில் வாழும் 9 வகையான கழுகுகள் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. 

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ் ஆகிய 9 மொழிகளில் ஆடியோ இணைக்கப்பட்டு உள்ளது. மொழியை தேர்வு செய்து, அதற்கான சுவிட்சை அழுத்தினால் ஒரு நிமிடம் கழுகு பேசுவதுபோல் அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

நிகழ்ச்சியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தனியார் அமைப்பு செயலர் பாரதிதாசன் கூறும்போது, நீலகிரியில் செம்முக கழுகு, கருங்கழுத்து கழுகு, வெண்முதுகு கழுகு ஆகிய 3 வகையான கழுகுகள் வாழ்ந்து வருகின்றன.

கால்நடைகளுக்கு தரப்படும் வலி போக்கி மருந்துகள், நஞ்சு தடவப்பட்ட பிணங்கள் உள்ளிட்ட காரணங்களால் கழுகுகள் இறந்து வருகின்றன. இறந்ததை தின்று இருப்பதை பாதுகாக்கும் பணியில் கழுகுகள் முக்கிய பங்காற்றுகிறது. இதனை பாதுகாக்க வேண்டிய கடமை இளம் தலைமுறையினரிடம் உள்ளது என்றார்.

Next Story