ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஊட்டி,
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கழிக்கவும், பொழுதை போக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பச்சை, பசேல் என காணப்பட்ட புல்வெளியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கிய பல வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். நிலா மாடத்தில் அமர்ந்தபடி பூங்காவின் இயற்கை அழகை பார்வையிட்டனர்.
பூங்கா முன்பகுதியில் செல்பி ஸ்பாட்டுடன் கூடிய மாதிரி சைக்கிளில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். ஊட்டி படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் உள்பகுதியில் பூங்காவை கண்டு ரசித்ததோடு, மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
இதேபோல் பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 3 ஆயிரம் 891 பேர் வருகை தந்தனர். முழு ஊரடங்குக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது.
Related Tags :
Next Story