பள்ளி மாணவர் உள்பட 22 பேருக்கு கொரோனா
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பள்ளி மாணவர் உள்பட மேலும் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்:
கொரோனா பாதிப்பு உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 10 ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கடந்த 1½ மாதத்துக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 22 ஆக உயர்ந்தது. இதில் கொடைக்கானலை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவரும் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதன்மூலம் கடந்த 1-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் திறந்த பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆனது. அதில் 5 பள்ளி மாணவர்களும், 4 கல்லூரி மாணவர்களும் இடம்பெற்றனர். இதற்கிடையே 4 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தடுப்பூசி அவசியம்
நேற்றைய நிலவரப்படி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 115 ஆனது. இதன்மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 100-ஐ தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story