தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,182 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,182 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான இளவழகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் கோபிநாதன், சந்திரன், விஜயகுமார், முத்துகுமாரவேல், ஜெகதீசன், அருண்குமார், பூர்ணிமா, ஆயுஷ்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 2,701 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 1,751 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
1,182 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகபூபதி, வக்கீல்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், வேலவன், தீனதயாளன், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் சரோஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 1,098 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.6 கோடியே 29 லட்சத்து 72 ஆயிரத்து 675-க்கும், நிலுவையில் இல்லாத வழக்குகளில் 84 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.82 லட்சத்து 80 ஆயிரத்து 782-க்கும் ஆக மொத்தம் 4,452 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 1,182 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.7 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரத்து 457-க்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story