வீட்டை சூறையாடிய வாலிபர் அடித்துக்கொலை
செஞ்சி அருகே வீட்டை சூறையாடிய வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சேபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வீரமுத்து (வயது 27). மனநலம் பாதிக்கப்பட்டவர். எதிர்வீட்டில் வசிக்கும் சுந்தரம்(60) குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்திற்கு சென்று, அங்கேயே தங்கி விட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் வீரமுத்து, சுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினார். இதற்கிடையே நேற்று அதிகாலையில் சுந்தரம் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடந்தது.
வாலிபர் அடித்துக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம் குடும்பத்தினர் கல் மற்றும் தடியால் வீரமுத்துவை அடித்து கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமார்(35), ராஜேந்திரன்(28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுந்தரத்தின் மனைவி ரத்தினத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story