பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு
கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு
கச்சிராயப்பாளையம்
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் அனைவரும் கொரோனா தடு்ப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
வடக்கநந்தல் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டில் இருந்த பொதுமக்களிடம் நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா? அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்த சுகாதாரத் துறை அலுவலர்களிடம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டு உள்ளார்கள்? இன்னும் எவ்வளவு பேர் தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டார். அப்போது இதுவரை 10 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள். இன்னும் 5,591 பேர் தடுப்பூசி போடாமல் உள்ளார்கள். அவர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று கூறினார்கள்.
அதற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்று உத்தரவிட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். எங்கெங்கு முகாம்கள் அமைத்து உள்ளீர்கள் என்று பொதுமக்களுக்கு தெரியபடுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அப்போது வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், அலுவலர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story