தி.மு.க. பிரமுகரின் கார் செட்டுக்கு தீவைப்பு


தி.மு.க. பிரமுகரின் கார் செட்டுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 11 Sept 2021 11:19 PM IST (Updated: 11 Sept 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் தி.மு.க. பிரமுகரின் கார் செட்டுக்கு தீவைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52). இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி இணை அமைப்பாளராகவும், ஸ்ரீவைகுண்டம் பள்ளிவாசல் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு அருகே கூரையால் வேயப்பட்ட கார் செட்டில், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். மேலும் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான மரக்கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து கார் செட்டில் வைத்து விட்டு இரவில் தூங்க சென்றார். 

இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் கார் செட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஷாஜகானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு வந்து பார்த்தபோது, கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனாலும், அங்கிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. 

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசில் ஷாஜகான் புகார் செய்தார். அந்த புகாரில், ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் செட்டுக்கு தீவைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  

Next Story