பட்டா கேட்டு நரிக்குறவ மக்கள் போராட்டம்


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 Sep 2021 5:54 PM GMT (Updated: 2021-09-11T23:24:24+05:30)

மங்களமேடு அருகே பட்டா கேட்டு நரிக்குறவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களமேடு
பட்டா கேட்டு போராட்டம்
மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் நரிக்குறவ மக்கள் காலனியையொட்டியுள்ள சுமார் 333 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20 வருடங்களாக அப்பகுதி மக்கள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தமிழக அரசு உத்தரவின்பேரில் மேற்படி இடத்தில் பயிரிட தடை விதித்தது. ஆனால் நரிக்குறவ மக்கள் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நரிக்குறவ மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வருவாய் துறையினருக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் டிராக்டர் உடன் தடையை மீறி நிலத்தை உழவு செய்ய தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எறையூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, விவசாயம் செய்வதை தடுத்தார். அப்போது நரிக்குறவர் மக்கள் டிராக்டருக்கு வைத்திருந்த டீசல் கேனை காட்டி தங்களது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து கொள்ளபோவதாக மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதையடுத்து வேப்பந்தட்டை துணை வட்டாட்சியர் சீனிவாசன், வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளர் தங்கமணி, கிராம நிர்வாக அலுவலக பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதில் சமாதானம் அடைந்த நரிக்குறவ மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story