மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி நிர்வாகி படுகொலை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் வசீம் அக்ரம் (வயது 44). சமூக ஆர்வலரும், வாணியம்பாடி நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான இவர், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அதன்பேரில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டரை பகுதியில், பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக சென்னை நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.
2 பேர் பிடிபட்டனர்
இதனால் சந்தேகமடைந்த போலீசார் பின்தொடர்ந்து சென்று கீழம்பி அருகே மடக்கி பிடிக்க முயன்ற போது காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 9 பேர் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்டவர்கள் சென்னை வண்டலூர் ஓட்டேரி நேதாஜி தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் பிரசாந்த் என்கிற ரவி (வயது 19), வாசுதேவன் என்பவரது மகன் டில்லி குமார் (24) என்பது தெரியவந்தது.
11 பட்டா கத்தி, அரிவாள் பறிமுதல்
கஞ்சா வியாபாரி இம்தியாஸ் என்பவர் சொல்லித்தான் இந்த கொலையை நாங்கள் செய்தோம் என்று அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் சென்னையை சேர்ந்த பிரபல கேங்க் சீசிங் ராஜா குரூப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் விட்டுச்சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து 11 பட்டா கத்தி மற்றும் அரிவாளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய 7 பேரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையிலான போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று நண்பகல் 12 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நியூடவுனில் கல்லூரி எதிரில் உள்ள வளாகத்தில் வைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் செந்தில் குமார், தேவராஜி, மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் சமத், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
கஞ்சா விற்பனை
கொலை தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு கூறுகையில், வாணியம்பாடி ஜீவாநகர் பகுதியை சேர்ந்த டீல் இம்தியாஷ் என்பவருக்கும், இறந்துபோன வசீம் அக்ரம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இம்தியாஷ் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்துள்ளார். கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களில் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
அவர்கள் ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த டில்லி குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மற்ற கொலையாளிகளை தேடி வருகிறோம் என கூறினார்.
முன்விரோதம்
கடந்த 26.7.2021 அன்று வாணியம்பாடி பகுதியில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டா கத்தி மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். வசீம் அக்ரம்தான் போலீசாருக்கு சொல்லியதாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கொலை தொடர்பாக வாணியம்பாடி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story