647 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்திற்கு தீர்வு


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 Sep 2021 6:06 PM GMT (Updated: 2021-09-11T23:36:19+05:30)

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 647 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ.பல்கிஸ் தலைமை தாங்கினார். இதில் எஸ்.சி. எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி மலர்விழி, குடும்ப நல நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி சகிலா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் நீதிபதி மகாலட்சுமி மற்றும் குற்றவியல் மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் கொண்ட அமர்வு, பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இருதரப்பிலும் விசாரணை செய்து உடனடி தீர்வு கண்டனர்.
இவற்றில் வங்கி தொடர்பான 76 வழக்குகளில் ரூ.81 லட்சத்து 62 ஆயிரத்து 400ம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 28 ஆயிரத்து 100ம், சிவில் பிரச்சினைகள் தொடர்பான 14 வழக்குகளில் ரூ.1 கோடியே 84 லட்சத்து 36 ஆயிரத்து 958ம், சிறுகுற்றங்கள் தொடர்பான 531 வழக்குகளில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 200ம் ஆக மொத்தம் ரூ.3 கோடியே 81 லட்சத்து 37 ஆயிரத்து 658 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் பிரிந்த கணவன்-மனைவி இருவரும் சேர்த்து வைக்கப்பட்டனர்.
இதில் பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேசன் அமைப்பின் நிர்வாகிகள், போலீசார், வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா
மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

Next Story