கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி விபத்து


கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி விபத்து
x
தினத்தந்தி 11 Sep 2021 6:38 PM GMT (Updated: 2021-09-12T00:08:56+05:30)

குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.

தோகைமலை,
மின்வாரிய தொழிலாளி
குளித்தலை பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவருடைய  மகன் சுரேந்தர் (வயது 25). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 
இந்தநிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூர் ஊராட்சி குப்பாண்டியூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சுரேந்தர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். பின்னர் அவர் மட்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
கார் சேதம்
நேற்று மதியம் 3 மணியளவில் தனது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக குப்பாண்டியூருக்கு சுரேந்தர் காரில் சென்றார். குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தேசியமங்கலம் தென்பகுதியில் உள்ள வளைவில் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோர தடுப்பு கட்டையில் மோதியது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுரேந்தர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தேசியமங்கலம் தென்பகுதியில் குறுகலான சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு கட்டை  அமைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மாதம் ஒரு முறையாவது விபத்து நடக்காமல் இருந்ததில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தடுப்பு கட்டையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர்.

Next Story