நெடுவாசல் மேற்கு குறுவாடி ஆதிதிராவிடர் காலனியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நெடுவாசல் மேற்கு குறுவாடி ஆதிதிராவிடர் காலனியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகாடு:
ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் மேற்கு குறுவாடி பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் தொகுப்பு வீடுகள் உள்ளது. இதன் அருகே இவர்களுக்கு சொந்தமான இடத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த இடத்தை மீட்டு தங்களுக்கு சமுதாய கூடம் மற்றும் விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என்று நான்கு ஆண்டுகளாக இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார், வடகாடு போலீசார் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித பதிலோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெடுவாசல் மேற்கு பகுதியில் வடகாடு-பேராவூரணி சென்ற அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடகாடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், அமைச்சர் மெய்யநாதனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதில் வருகிற 15-ந்தேதி அன்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோரிக்கை
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கஜா புயலின் போது இருக்க இடம் இல்லாமல் தங்களது குழந்தைகளுடன் தவித்து வந்ததாகவும், ஒரு சமுதாய கூடம் இருந்து இருந்தால் அதில் பாதுகாப்பாக தங்கி இருந்து இருப்போம். எங்களுடைய இடத்தை மீட்டு தங்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் உதவ வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story