750 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்: 63 ஆயிரம் டோஸ்கள் புதுக்கோட்டை வந்தன 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் 63 ஆயிரம் டோஸ்கள் வந்தன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி டோஸ்கள் மொத்தம் 63 ஆயிரம் அளவில் வந்தன. அவை புதுக்கோட்டையில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன.
இதில் இருந்து மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ளலாம்.
அடையாள அட்டை
இதேபோல முதல் தவணை தடுப்பூசி டோஸ் செலுத்தி 2-வது தவணை டோஸ்க்காக காத்திருப்பவர்களும் செலுத்திக்கொள்ளலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய புத்தகம், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
75 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி
கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் கவிதா ராமு உள்பட அதிகாரிகள் பலர் விழிப்புணர்வு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதில் கலெக்டர் கவிதா ராமு வெளியிட்ட வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் 75 கிராம ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். இதேபோல மற்ற கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக பங்கெடுத்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.
Related Tags :
Next Story