தி.மு.க. அரசை எதிர்க்கட்சியினரும் பாராட்ட தொடங்கி விட்டனர் நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு


தி.மு.க. அரசை எதிர்க்கட்சியினரும் பாராட்ட தொடங்கி விட்டனர்  நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 12 Sept 2021 12:48 AM IST (Updated: 12 Sept 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை எதிர்க்கட்சியினரும் பாராட்ட தொடங்கி விட்டனர். அரிமளத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

அரிமளம்:
நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் லெணா விலக்கில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார். விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 360 பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைதொடர்ந்து விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- 
ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு 
கடந்த ஆட்சியில் கொரோனா நாள் ஒன்றுக்கு 35 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நாளொன்றுக்கு 1,500 ஆக குறைந்து உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. புதுக்கோட்டையில் தடுப்பூசி முகாம் நாளை (இன்று) நடைபெற உள்ளது. நான் கழக தலைவரை சந்தித்து புதுக்கோட்டை செல்ல உள்ளேன் என தெரிவித்தேன். அப்போது கழக தலைவர் இலங்கை தமிழர் முகாமிற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டு உதவி செய்ய சொன்னார். 
சட்டசபையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயரை மாற்றி அறிவித்து, ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் 7,000 புதிய வீடுகள் கட்டுதல், 3000 பழுதடைந்த வீடுகளை செப்பனிடுதல் மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 
மாணவிகளுக்கு டேப் 
தொழில் கல்வி பயிலும் முதல் இடத்தை பெறும் 50 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுதி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண கொடை உயர்த்தப்படாமல் இருந்தது. தமிழக முதல்-அமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இலவச கியாஸ் அடுப்பு, விலையில்லா அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இலங்கை தமிழர்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி உள்ளார்.
இந்த லெணா விலக்கு பகுதியை சேர்ந்த மாணவிகள் செரீனா கிரீஸ், மோனிகா கிரிஷ் ஆகியோர் தங்களுடைய சேமிப்பு தொகையை கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்து அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பி இருந்தார்கள். அதில் ஆன்லைன் வகுப்பு படிப்பதற்கு சிரமமாக உள்ளது.எனவே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். அதன் அடிப்படையில் அந்த மாணவிகள் இருவருக்கும் தற்போது ஆன்லைன் வகுப்பு படிப்பதற்கு ஏதுவாக டேப் வழங்கப்படுகின்றது. 
இவ்வாறு அவர் கூறினார். 
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தைக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன் ராமலிங்கம், அரிமளம் ஒன்றிய குழுத்தலைவர் மேகலாமுத்து, தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்து லட்சுமி சுந்தரகோபாலன், துணைத்தலைவர் அனுராதாகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி 
புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் அருகே கருப்பர் கோவில் திடலில் அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  ``புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்றுகட்சியில் இருந்து விலகி இணைந்துள்ளனர். இதில் முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நான் பிரசாரம் செய்தது மட்டுமில்லை. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்.  
அ.தி.மு.க.வினர் பாராட்டு 
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் மட்டும் பல்வேறு தவறுகள் நடந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து அங்கிருந்து வந்த உங்களுக்கு (அ.தி.மு.க.வினர்) தெரியும். உங்கள் மூலம் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று சரிசெய்வோம். ஏற்கனவே 2 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சரின் அறிவிப்பு ஒவ்வொன்றும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. 
நாங்கள் சட்டமன்றத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது கவனிப்போம். சட்டமன்றத்தில் எங்களை எதிர்த்து யாருமே பேசவில்லை. அ.தி.மு.க. கொறடா வேலுமணி, எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எல்லாம் நம்மளை பாராட்டி பேச தொடங்கிவிட்டனர். அந்தளவுக்கு அரசின் செயல்பாடு உள்ளது.தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்து 100 நாட்களில் தொற்று பாதிப்பு 1,500 ஆக குறைந்தது. 110 நாட்களில் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 6 மாதத்தில் 50 லட்சம் பேருக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். தேர்தல் அறிக்கையில் கூறிய ஒவ்வொன்றையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார். 
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மு.க. முத்துக்கருப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் என்.கே.எஸ். ஹாஜா மைதீன், இளைஞர் அணியை சேர்ந்த  என்.கே.எஸ். அஜ்மல்கான்  உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓரு ஓட்டலில் இளைஞர் அணி நிர்வாகிகளை உதயநிதிஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Next Story