வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்
வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
மதுரை
வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெட்டிக்கொலை
மதுரை சிலைமான் அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 38). தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவரான இவர் நேற்று முன்தினம் விரகனூர் கோழிமேடு பகுதியில் வந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்திரனை வெட்டி சாய்த்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்
இந்தநிலையில், நேற்று காலை பாலசந்திரனின் உறவினர்கள் மற்றும் தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பிரதான சாலையில் வைத்து, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர்.
இதற்கிடையே, இந்த கொலை வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பாலசந்திரனுக்கும் வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
உசிலம்பட்டி
மேலும் ேதனி பகுதியில் இருந்து தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்களை மதுரை மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தமிழ்புலிகள் அமைப்பினர் சோதனை சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story