சேலம் மாவட்டத்தில் இன்று சிறப்பு முகாம்: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வீடு, வீடாக சீட்டு வழங்கும் பணி
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து சேலத்தில் வீடு, வீடாக தடுப்பூசி போடுவதற்கான சீட்டு (சிலிப்) வழங்கும் பணி நடைபெற்றது.
சேலம்
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,356 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி சீட்டு (சிலிப்) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சீட்டுகள் வினியோகம்
அதன்படி சேலம் அஸ்தம்பட்டி திருநகரில் நேற்று தடுப்பூசி போடாதவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மெகா தடுப்பூசி கண்காணிப்பு அதிகாரி கதிரவன் ஆகியோர் சென்று தடுப்பூசி சீட்டுகளை மக்களுக்கு வழங்கினர்.
இதேபோல், சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்குச்சீட்டு போன்று தடுப்பூசி சீட்டுகளை வழங்கும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர்.
2 லட்சம் பேர்
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டும் தேவையான அளவு இருப்பில் உள்ளது. மொத்தம் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும். இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசி சீட்டு வழங்கும் பணியின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சரவணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் நளினி, ஜெமினி (ஆத்தூர்), மாநகர் நல அலுவலர் யோகநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாழப்பாடி
இதைத்தொடர்ந்து வாழப்பாடி பேரூராட்சி மற்றும் முத்தம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story