மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கி தாய்-மகன் சாவு + "||" + mother and son drowned in river died

ஆற்றில் மூழ்கி தாய்-மகன் சாவு

ஆற்றில் மூழ்கி தாய்-மகன் சாவு
குந்தாப்புரா அருகே ஆற்றில் மூழ்கி தாய்-மகன் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு: குந்தாப்புரா அருகே ஆற்றில் மூழ்கி தாய்-மகன் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு

உடுப்பி மாவட்டம், குந்தாப்புரா தாலுகா சங்கிகுட்டே பகுதியை சேர்ந்தவர் நோயல். அவரது மனைவி ரோசாரியோ (வயது 35). இந்த தம்பதியின் மகன் ஷான் (வயது 11). இந்த நிலையில் நேற்று முன் தினம் ரோசாரியோவும், ஷானும் அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் நடந்து சென்றனர். அந்த ஆற்றை ஒட்டியபடியே செல்லும் பாதையில் இருவரும் செல்லும்போது திடீரென ஷான் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டான். 

நீச்சல் தெரியாததால் ஷான் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோசாரியோ, காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனால் அந்தப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் ஆற்றுக்குள் குதித்து மகனை காப்பாற்ற ரோசாரியோ முடிவு செய்தாா். அதன்படி அவரும் ஆற்றுக்குள் குதித்து மகனை காப்பாற்ற முயன்றார். 

தாய்-மகன் சாவு

ரோசாரியோவுக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் தாய், மகன் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் மாலை வெகுநேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வராததால், நோயால் அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தார். 

அப்போது ஆற்றங்கரையோரத்தில் அவருடைய மனைவி ரோசாரியோவின் செருப்பு கிடந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நோயல், இதுகுறித்து கங்கொல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். 

உடல்கள் மீட்பு

இதையடுத்து தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள் படகுகள் மூலம் அந்த ஆற்றில் 2 பேரின் உடல்களையும் தேடினார்கள். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ரோசாரியோ மற்றும் அவருடைய மகன் ஷான் ஆகிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. 2 பேரின் உடல்களை பார்த்து நோயால் கதறி அழுதார். 

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்கொல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.