குடகில் தடுப்பூசி போட்ட 953 பேருக்கு மீண்டும் கொரோனா


குடகில் தடுப்பூசி போட்ட 953 பேருக்கு மீண்டும் கொரோனா
x
தினத்தந்தி 12 Sept 2021 3:15 AM IST (Updated: 12 Sept 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

குடகில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 953 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடகு: குடகில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 953 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்தது. ஊரடங்கு உள்பட மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடக மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

953 பேருக்கு மீண்டும் பாதிப்பு

இதேபோல கேரளாவையொட்டி உள்ள குடகு மாவட்டத்திலும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குடகு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் மாவட்டத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. 

மேலும் குடகு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 953 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குடகு மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பாதிப்பு விகிதம் அதிகரிப்பு

குடகு மாவட்டத்தில் கொரோனா பரவலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தடுப்பூசி போட்டுக் கொண்ட 953 பேருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதமும் அதிகரித்து உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story