விநாயகர் சிலையை உடைத்த மர்மநபர்கள்
செல்லகெரே அருகே விநாயகர் சிலையை மர்மநபர்கள் உடைத்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு: செல்லகெரே அருகே விநாயகர் சிலையை மர்மநபர்கள் உடைத்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா ஹிரேஹள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதாவது, அங்கு பந்தல் அமைத்து விநாயகர் சிலையை வைத்திருந்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைக்கு கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அந்த விநாயகர் சிலையை 2 நாட்கள் கழித்து கரைக்க கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து கிராம மக்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
சிலை உடைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள், பந்தல் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள், விநாயகர் சிலையை கீழே தள்ளி உடைத்தனர். அதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். நேற்று காலை அந்தப்பகுதி மக்கள் பந்தல் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து பார்த்தனர்.
அப்போது அங்கு விநாயகர் சிலை உடைக்கப்பட்டு, துண்டு, துண்டாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் பந்தல் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு திரண்டு வந்தனர்.
கிராம மக்கள் போராட்டம்
இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், யாரோ மர்மநபர்கள் வேண்டுமென்றே விநாயகர் சிலையை உடைத்துள்ளனர். அவர்களை கண்டுப்பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் செல்லகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போலீசார், மர்மநபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பதற்றம்
மேலும் அந்தப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
Related Tags :
Next Story