சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி பட்ஜெட்; பசவராஜ் பொம்மை தகவல்
சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு வனத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
10 சதவீதம் அதிகரிக்க...
நமது முன்னோர்கள் மிகவும் சிரமப்பட்டு வனப்பகுதியை உருவாக்கி உள்ளனர். அதனை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையை பாதுகாப்பது சவாலானதாக இருக்கும். மாநிலத்தில் தற்போது இருக்கும் வனப்பகுதியை இன்னும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும். காடுகளை பாதுகாக்கவும், வனப்பகுதியை மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு தயாராக உள்ளது.
காடுகளை வளர்ப்பதுடன், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது, வனவிலங்குகளை பாதுகாக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். வனவிலங்குகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். ஊர்களுக்குள் புகும் வனவிலங்குகளை கொல்வதை தவிர்த்துவிட்டு, அவற்றை பிடித்து மீண்டும் காடுகளுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் வனவிலங்களை பாதுகாப்பது மனிதர்களால் சாத்தியப்படும்.
தனி பட்ஜெட்
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, வனத்துறையில் பணியாற்றுபவர்கள் பணியின் போது உயிர் இழந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினார். ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவியை அவர் ரூ.30 லட்சமாக உயர்த்தி இருந்தார். இதற்காக எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வனத்துறையினர் நேர்மையாக செயல்பட்டு காடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வனப்பகுதிகளை பாதுகாப்பதில் அதிக கவனத்தை வனத்துறையினர் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு ஆதுரவாக அரசு எப்போதும் இருக்கும். மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கவும், வனத்துறையை பாதுகாக்கவும் பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக சுற்றுச்சூழலுக்காக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தற்போது இருக்கும் தட்ப, வெப்ப நிலை மாற்றத்திற்கு கேற்ப உடனடியாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story