கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு


கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 9:49 PM GMT (Updated: 2021-09-12T03:19:13+05:30)

கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை:

கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடைபெறும். மேலும் தினமும் கோவிலை மாலை நேரத்தில் திறந்து மின்விளக்கை எரியவிட்டு, மறுநாள் காலையில் அதனை அணைப்பது வழக்கம். அதேபோல் நேற்று காலை ஒருவர், மின்விளக்கை அணைக்கச்சென்ற போது கோவில் வாசலில் துப்பாக்கி ஒன்று கிடந்ததை கண்டார்.
அந்த துப்பாக்கியின் உறை மற்றும் பால்ரசும் அங்கு இருந்தது. இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றிய தகவலை திருச்சியில் உள்ள ஆயுத வினைஞர் மற்றும் கைரேகை நிபுணருக்கு தகவல் கொடுத்தனர்.
நாட்டு துப்பாக்கி
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஆயுத வினைஞர் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் கைரேகை நிபுணர் வீரபிரதீப் ஆகியோர் வந்து துப்பாக்கியை ஆய்வு செய்தனர். பார்ப்பதற்கு பிஸ்டல் ரகம் போன்று அந்த துப்பாக்கி இருந்ததுடன், பால்ரஸ் செலுத்தி சுடும் வகையில் இருந்தது. ஆனால் ஆய்வை தொடர்ந்து, அது நாட்டு துப்பாக்கி என்பதும் பறவைகளை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்ற வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் அந்த துப்பாக்கியை கோவில் வாசலில் போட்டுச்சென்றது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கோவில் வாசலில் துப்பாக்கி கிடந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் அதிக அளவில் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story