கடையத்தில் அரசு கல்லூரி அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


கடையத்தில் அரசு கல்லூரி அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 10:14 PM GMT (Updated: 11 Sep 2021 10:14 PM GMT)

அரசு கல்லூரி அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

கடையம்:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடையம் யூனியனில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கடையம் யூனியனில் அரசு கல்லூரி அமைப்பதற்காக பல்வேறு இடங்களை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாசகிரி மலை அருகில் உள்ள இடம், கடையம்-தென்காசி மெயின் ரோடு இறைப்பனை, மாதாபுரம் அருகே எல்லைபுளி, மாதாபுரம்-புலவனூர் ரோடு இருலுத்துகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கடையம் புதுகிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட பழைய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு புதிய கட்டிடம் கட்டலாமா? அல்லது பழைய கட்டிடத்தை அரசின் பிற துறைக்கு பயன்படுத்தலாமா? என்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கடையம் சந்தை அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாயில் இருந்து காற்று வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட திறப்பின் வழியாக வெளியேறும் தண்ணீரை அருகில் உள்ள மெயின் ரோடு பகுதியில் வினியோகம் செய்யும் வகையில் தெருக்குழாய் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜீவா என்ற அருணாசலம், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் புளி கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர், கடையம் வில்வவனநாதர் கல்யாணி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story