தேசிய லோக் அதாலத் மூலம் 2,764 வழக்குகளில் முடிவு; மாவட்டம் முழுவதும் ரூ.19 கோடி தொகைக்கு தீர்வு


தேசிய லோக் அதாலத் மூலம் 2,764 வழக்குகளில் முடிவு; மாவட்டம் முழுவதும் ரூ.19 கோடி தொகைக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Sep 2021 12:37 AM GMT (Updated: 12 Sep 2021 12:37 AM GMT)

திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் மூலம் குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் உள்பட 2,764 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சுபத்ரா தேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமைகள் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகளுக்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. இதில் குடும்ப நலத்துறை நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம், மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவி மற்றும் வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

2,764 வழக்குகள் முடிவு
அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய கோர்ட்டுகளிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,544 வழக்குகள் எடுக்கப்பட்டு அவற்றில் 2,764 வழக்குகள் முடிக்கப்பட்டது. இதற்கு ரூ.19 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 889 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.



Next Story