போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை கரைப்பு
விழுப்புரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை வீடூர் அணையில் கரைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் பா.ஜ.க. அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று 3 அடிஉயரமுள்ள விநாயகர் சிலை வைத்து கட்சியினர் வழிபட்டனர். தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபட்டதாக மாவட்டத்தலைவர் கலிவரதன் உள்பட 6 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று 3-ம் நாள் என்பதால் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலையை கரைக்க பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். இதற்காக மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அலுவலகம் முன்பு திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்லக்கூடாது என்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையின்படி போலீசார் ஏற்பாடு செய்த வேனில் விநாயகர் சிலையை ஏற்றினர். பின்னர் அதே வேனில் பா.ஜ.க.வினரும் ஏறிக்கொண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் வீடூர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. வேனுக்கு முன்னும், பின்னும் பா.ஜ.க.வினர் தங்களது இருசக்கர வாகனத்தில் கோஷமிட்டப்படி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story