தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு


தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு
x
தினத்தந்தி 12 Sept 2021 9:52 PM IST (Updated: 12 Sept 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வை 677 பேர் எழுதினர். 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி:
தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வை 677 பேர் எழுதினர். 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.
‘நீட்’ தேர்வு
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி, தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டு இருந்தது. 12 மாணவ-மாணவிகளுக்கு ஒரு தேர்வு அறை வீதம் மொத்தம் 60 தேர்வு அறைகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 2 கண்காணிப்பு அலுவலர்கள் வீதம் மொத்தம் 120 கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த தேர்வை எழுதுவதற்காக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். மாணவ-மாணவிகள் பலரும் தங்களின் பெற்றோருடன் வந்தனர். அவர்கள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் வந்தனர். சிலர் முத்துத்தேவன்பட்டி வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து தேர்வு மையத்துக்கு நடந்து வந்தனர்.
பரிசோதனை
தேர்வு மையத்துக்குள் பகல் 11 மணியளவில் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மொத்த மாணவர்கள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நிறுத்தப்பட்டனர். மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் கையுறையும் அணிந்து வந்தனர். முக கவசம் அணியாமல் வந்த மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, மாணவ-மாணவிகளின் ஆதார் கார்டு, தேர்வுக்கூட நுழைவு அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆகிய விவரங்களை ஆய்வு செய்தபின்பு தேர்வு அறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கடுமையான கட்டுப்பாடுகள்
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வு அறைக்குள் ஹால்டிக்கெட், ஆதார் கார்டு, புகைப்படம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. நுழைவு வாயிலில் பரிசோதனை செய்த போது கைக்குட்டை, துப்பட்டா போன்றவற்றை எடுத்துச்செல்ல அனுமதி மறுத்து அவற்றை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் வாங்கிக்கொண்டனர்.
மேலும் செயின், மோதிரம், வளையல், கம்மல் போன்ற எந்த ஆபரணங்கள் அணிந்தும் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், தேர்வு மையத்துக்கு வெளியே நின்றபடி மாணவிகள் தாங்கள் அணிந்து இருந்த கம்மல், வளையல், மோதிரம், செயின் போன்றவற்றை கழற்றி தங்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். சில மாணவர்கள் அரைக்கால் டவுசர் அணிந்து வந்தனர். அவர்களுக்கு தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் வெளியே சென்று பேண்ட் அணிந்து வந்ததால் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் முக்கால் டவுசர் அணிந்து வந்த மாணவி ஒருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவரும் பேண்ட் அணிந்து வந்து தேர்வு மையத்துக்குள் சென்றார்.
677 பேர் எழுதினர்
தேர்வு மையத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு ஹால்டிக்கெட், ஆதார் கார்டு நகல், உடல் அங்க அடையாளங்கள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. தீவிர பரிசோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மையத்தில் நீட் தேர்வை எழுத மொத்தம் 720 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் மொத்தம் 677 பேர் தேர்வு எழுதினர். 43 பேர் தேர்வு எழுதவரவில்லை. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. அமைதியான முறையில் தேர்வு நடந்தது. தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Next Story