நீர்நிலைகளில் 290 விநாயகர் சிலைகள் கரைப்பு
நீலகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் 290 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊட்டி,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விசர்ஜன ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை.
இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபட்டனர். மேலும் இந்து முன்னணி சார்பில் வீடுகள் மற்றும் கோவில் வளாகங்களுக்குள் 290 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வைக்கப்பட்ட சிலைகள் காமராஜ் சாகர் அணையிலும், குன்னூர் பகுதியில் பிரதிஷ்டை செய்த சிலைகள் காட்டேரி நீர்வீழ்ச்சியிலும் மற்றும் கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என 5 இடங்களில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் கரைத்தனர். வீடுகள், தனியார் கோவில் வளாகங்களில் இருந்து எடுத்து சென்ற விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு கீழே இறக்கப்பட்டது. பின்னர் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் வீரர்கள் 2 துடுப்பு படகுகளில் சிலைகளை உள் பகுதிக்கு எடுத்துச் சென்று தண்ணீரில் கரைத்தனர். ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஒவ்வொரு சிலைகளாக எடுத்து வந்து கரைக்கப்பட்டது.
கூடலூர், ஓவேலி, தேவர்சோலை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி நாளில் சிலைகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடந்தது. நேற்று கூடலூர், ஓவேலி, மசினகுடி ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 32 சிலைகள் கொட்டும் மழையிலும் தனித்தனி வாகனங்களில் கொண்டு சென்று பாண்டியாற்றில் கரைக்கப்பட்டன.
இதேபோல் மசினகுடி பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மாயார் ஆற்றில் கரைக்கப்பட்டது. விசுவ இந்து பரிஷத் சார்பில் வைக்கப்பட்டு இருந்த 30 சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள ஆறுகளில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story