தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே பயங்கர மோதல் பஸ் கண்ணாடி உடைப்பு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. வீட்டை சூறையாடியவர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கண்டாச்சிமங்கலம்
மினிபஸ் டிரைவர்
தியாகதுருகம் அருகே குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(வயது 24). தனியார் மினி பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு தியாகதுருகத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சீதேவி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அந்தியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சற்குணம்(25) மற்றும் நாராயணன்(49) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் பஸ் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதை அவர்களிடம் விஜயகுமார் தட்டிகேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
வழிமறித்து தாக்குதல்
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த சற்குணம் நடந்த சம்பவத்தை ஊரில் உள்ள தனது நண்பரிடம் தெரிவித்து விட்டு பஸ்சை பின்தொடர்ந்து அந்தியூருக்கு வந்தார்.
அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சற்குணம், நாராயணன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் அய்யப்பன் (26), ராஜேந்திரன் மகன் பிரபு(33) ஆகிய 4 பேரும் மினி பஸ் டிரைவர் விஜயகுமார் மற்றும் கண்டக்டர் பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் கவுதம்(22) ஆகியோரை வழிமறித்து தாக்கியதோடு பஸ்சின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
20-க்கும் மேற்பட்ட நபர்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அந்தியூர் கிராமத்தில் உள்ள தனது நண்பர்களை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதை அடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்ததை அடுத்து அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மகன் அய்யப்பன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதோடு வீட்டில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
போலீசார் விரட்டியடிப்பு
இதுபற்றி தகவல் அறிந்து தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப் பிரிவு ஏட்டு சீனிவாசன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் கவுதம் ஆகியோரை போலீசார் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க தீவிர பாதுகாப்பு பணியில் இருக்கும் படி அறிவுரை வழங்கினார்.
9 பேர் கைது
பின்னர் இந்த சம்பவம் குறித்து மினி பஸ் டிரைவர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் ராஜவீதியைச் சேர்ந்த சற்குணம், நாராயணன், அய்யப்பன், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், கவுதம், மற்றும் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகன் வீரா, நந்தர் மகன்கள் பிரதீப் (23), அசோக் (20), அண்ணாமலை மகன் மணிகண்டன் (23), வேலு மகன் அருண், நடேசன் மகன் முனீஸ்வரன், முருகேசன் மகன் அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயகுமார், கவுதம், பிரதீப், அசோக், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 11 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் குவிப்பு
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மினி பஸ்சை வழி மறித்து தாக்கிய சம்பவத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story