கொரோனா தடுப்பூசி போட்ட 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசு
திருச்செந்தூரில் கொரோனா தடுப்பூசி போட்ட 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகரப்பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்ப பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மெல் நடுநிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
முன்னதாக நகரப்பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களாக ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே ஆர்வமுடன் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்களுக்கு நகரப்பஞ்சாயத்து சார்பில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது. இதில் 24 பெண்களுக்கு, நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் இப்ராஹிம்ஷா சேலைகளை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், நகரப்பஞ்சாயத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story