கெலமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி - பொதுமக்கள் சாலை மறியல்
கெலமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பச்சப்பனட்டியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஏரி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானையை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசப்பா தப்பி ஓட முயன்றார்.
ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி தும்பிக்கையால் தூக்கி வீசி தாக்கியது. இதில் வெங்கடேசப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெங்கடேசப்பாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதார்கள். மேலும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் (பொறுப்பு) சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து வெங்கடேசப்பாவின் உடலை அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தளி டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி வழங்கினார்.
வேப்பனப்பள்ளி அருகே கடந்த 10-ந் தேதி விவசாய நிலத்தில் காவலுக்கு சென்ற விவசாயிகள் நாகராஜ், சந்திரசேகரன் ஆகியோரை ஒற்றை யானை தாக்கி கொன்றது. இதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த ஒற்றை யானை கெலமங்கலம் வனப்பகுதி வழியாக பேவநத்தம் காட்டுக்கு வந்தது. அங்கிருந்து பொம்மதாத்தனூர் ஊராட்சி பச்சப்பனட்டிக்குள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது. அந்த யானை தான் விவசாயி வெங்கடேசப்பாவை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் 25-ந் தேதி கெலமங்கலம் அருகே குடியூரில் பசப்பா (65) என்ற விவசாயி யானை தாக்கி பலியான நிலையில், தற்போது அடுத்தடுத்த 3 நாட்களில் 3 விவசாயிகள் யானை தாக்கி பலியாகி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story