புலிகள் கணக்கெடுப்புக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி 110 இடங்களில் நடைபெற்று வருகிறது.
கூடலூர்
கூடலூர் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி 110 இடங்களில் நடைபெற்று வருகிறது.
புலிகள் கணக்கெடுப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கூடலூர், ஓவேலி, சேரம்பாடி, பிதர்காடு, பந்தலூர், நாடுகாணி உள்ளிட்ட 6 வனச்சரகங்களில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வது வழக்கம். இதற்கிடையில் தேசிய புலிகள் ஆணையம் கடந்த ஆண்டு முதல் புலிகளை தனியாக கணக்கெடுக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டது.
தானியங்கி கேமராக்கள்
அதன்படி இந்த ஆண்டு முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணியை கூடலூர் வனக்கோட்டத்தில் தொடங்குவதற்கான ஆயத்த பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக தானியங்கி கேமராக்களை பொருத்த 110 இடங்களை வனத்துறையினர் தேர்வு செய்தனர். ஒவ்வொரு இடத்திலும் 2 கேமராக்களை பொருத்த தீர்மானித்தனர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் வனக்கோட்டம் முழுவதும் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியை வனத்துறையினர் நேற்று தொடங்கினர்.
தகவல்கள் சேகரிப்பு
பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் தானியங்கி கேமராக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு, தொடர்ந்து 1 மாத காலம் நடைபெறும்.
2 நாட்களுக்கு ஒரு முறை கேமராவில் பதிவாகி உள்ள தகவல்கள் சேகரிக்கப்படும். தொடர்ந்து மொத்த தகவல்களும் தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே கண்டறியப்பட்ட புலிகள் நடமாடும் பகுதி, அதன் எச்சங்கள், தடயங்களும் கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story