தேவாலா அருகே சேதமடைந்த பாலம் இடிந்து விழும் அபாயம்


தேவாலா அருகே சேதமடைந்த பாலம் இடிந்து விழும் அபாயம்
x
தினத்தந்தி 12 Sept 2021 10:50 PM IST (Updated: 12 Sept 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா அருகே சேதமடைந்த பாலம் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அதை சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாலங்கள் சேதம் அடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் தேவாலா அட்டி பகுதியில் இருந்து நெல்லிக்கண்டிக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆற்று வாய்க்கால் செல்கிறது. இதை கடந்து செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இதன் அடிப்பாகங்கள் கற்களால் அமைக்கப்பட்டது. 

பருவமழை காலத்தில் அந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இதனால் அதன் பாலத்தில் உள்ள கற்கள் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில் கற்கள் பெருமளவு பெயர்ந்து விட்டது. இதனால் நாளுக்கு நாள் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் பல கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. பாலம் இடிந்தால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலம் சேதம் அடையாமல் தடுக்க சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தேவாலா அட்டியில் இருந்து பிழாமூலா, குஞ்சமூலா, பணிக்கமூலா, ஒத்தக்கல் உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக நெல்லிகண்டிக்கு செல்லும் வழியில் பாலம் சேதம் அடைந்து வருகிறது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த பாலம் இடிந்து விழுவதற்கு முன்பாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story