தூத்துக்குடியில் ரூ.28 கோடி செலவில் ஸ்டெம் பூங்கா- அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடியில் ரூ.28 கோடி செலவில் ஸ்டெம் பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.28¼ கோடி செலவில் ஸ்டெம் பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
ஸ்டெம் பூங்கா
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பஸ் நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாவட்ட அறிவியல் மையத்துக்கு இணையாக பிரமாண்டமான வகையில் அறிவியல் பூங்கா ஒன்றை அமைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.28 கோடியே 31 லட்சம் செலவில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பூங்கா) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல், விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புற கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சி கூடம், கண்டுபிடிப்பு மையம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி, ஓய்வு அறை, கழிப்பறைகள், கேன்டீன், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. இதனை தவிர சிறுவர் விளையாட்டு பூங்கா ஒன்றும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story