வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


வேலூர் மாவட்டத்தில்  ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 12 Sept 2021 11:01 PM IST (Updated: 12 Sept 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தின் மலைக்கிராமங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 971 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆட்டோக்கள், வேன் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமிற்கு பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். மருத்துவக்குழுவினர் பொதுமக்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து அவர்களின் ஆதார்எண், செல்போன் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினார்கள்.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதேபோன்று பழைய பஸ் நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா வைரஸ் பரவும் முறைகள் பற்றியும், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், இந்தியன் ரெட்கிராஸ்சங்க வேலூர் மாவட்ட கிளை துணைத்தலைவர் வெங்கடசுப்பு, தலைவர் உதயசங்கர், செயலாளர் மாறன், வேலூர் மாநகர நலஅலுவலர் மணிவண்ணன், உதவிகமிஷனர் மதிவாணன், தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆய்வு செய்தனர். 

சிறப்பு முகாம் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டம் முழுவதும் 55 சதவீத மக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் கூடுதல் முகாம் தேவைபட்டதால் 971 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. முகாம்களில் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் திரும்பி சென்றனர். அங்கு ஓரிருநாளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்புள்ளதால் விரைவாக செயல்பட்டு தொற்று பரவாமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

Next Story