8,289 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்


8,289 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 12 Sep 2021 5:45 PM GMT (Updated: 12 Sep 2021 5:45 PM GMT)

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்த நீட் தேர்வை 8,289 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்த நீட் தேர்வை 8,289 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

நீட்தேர்வு

இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6,273 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 600 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 1,800 பேர் என்று 3 மாவட்டங்களில் மொத்தம் 8,673 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 
அவர்கள் தேர்வு எழுத வேலூர் மாவட்டத்தில் 12 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களும் என்று 3 மாவட்டங்களில் மொத்தம் 16 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீட்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காலை 10 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வந்தனர். மாணவ-மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசைபடி நின்றனர். மாணவ-மாணவிகளுக்கு பேனா, என்.95 முககவசம், பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர்பாட்டில் வழங்கப்பட்டன.

8,289 மாணவர்கள் பங்கேற்பு

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மாணவிகள் தங்களது பெற்றோரிடம் செயின், கம்மல், மூக்குத்தி, கால்கொலுசு உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்தனர். பெரும்பாலான மாணவிகள் செயின், கம்மல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து வரவில்லை.

அதேபோல் கைக்கெடிகாரம், தொப்பி, மோதிரம், பெல்ட் போன்றவையும் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு பின்னர் வந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வராத மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 8,289 மாணவ-மாணவிகள் நீட்தேர்வு எழுதினர். 384 பேர் தேர்வு எழுதவில்லை. 3 மாவட்டங்களில் 95.6 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். இது கடந்தாண்டை விட 10 சதவீதம் அதிகம் என்று தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

நீட் தேர்வு நேற்று மாலை 2 முதல் 5 மணி வரை நடைபெற்றது. தேர்வு முடிவடையும் வரை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர். அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலானோர் மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு வந்து சாப்பிட்டனர்.

தேர்வு மையங்களுக்கு சென்று வர பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு தேர்வு மையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story