461 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்


461 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 12 Sept 2021 11:17 PM IST (Updated: 12 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

லாடனேந்தல் வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 461 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

திருப்புவனம்,
லாடனேந்தல் வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 461 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 
அந்தவகையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு அறிவிப்பு சற்று தாமதமாக வெளியான நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவி களும் மற்றும் மதுரை பிற இடங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் 480 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 175 மாணவர்களும் 305 மாணவிகளும் அடங்குவர்.
ஆய்வு
 பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கட்டுப்பாடுகளை பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் தெளிக்கப்பட்டு ஹால்டிக்கட்டுகள், ஆவணங்கள் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டன. 
மேலும் மாணவ -மாணவிகள் செல்போன், ஹெட்போன், பென்டிரைவ், நகை உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதில் மாணவிகள் பலர் தங்கள் போட்டு இருந்த தோடுகள், செயின், வாட்ச் ஆகியவைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர். பள்ளியின் உள்ளே மெட்டல் டிடெக்டர் கொண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் தேர்வு எழுதும் வளாகம் முழுவதும் செல்போன்கள் இயங்கவில்லை.  
பாதுகாப்பு
நுழைவு கேட்டில் 12 மணியில் இருந்து 1.30 மணி வரை மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். 1.30-க்கு பிறகு கேட் மூடப்பட்டது. இதில் தேர்வு எழுதுவதற்கு 168 மாணவர்களும் 293 மாணவிகளும் என 461 பேர் வந்திருந்தனர். 7 மாணவர்களும் 12 மாணவிகளும் என மொத்தம் 19 பேர் வரவில்லை.  மாணவ- மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருந்தனர். முன்னதாக திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

Next Story