திருப்பூர் சாமுண்டிபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
திருப்பூர் 12-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரம், மகாசக்திநகர், வடிவேல்நகர், வி.பி.சிந்தன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் குடிநீர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலை காலிகுடங்களுடன் சாமுண்டிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முற்றுகை
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி 1-வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் சுரேஷ், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஹரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி கடந்த 3 மாதங்களாக மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் பரபரப்பு
இதையடுத்து குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய லாரி வரவழைக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களில் பாதிபேர் மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். ஆனால் 12-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்கள் சிலர் மறியலை கைவிட மறுத்து, தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் நேரில் வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கமிஷனர் சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
இதன் பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சாமுண்டிபுரம்-குமார்நகர் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசியல் கட்சியினர் வாக்குவாதம்
குடிநீர் கேட்டு மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இருந்தனர். அப்போது குடிநீர் பிரச்சினை தொடர்பாக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் சம்பந்தப்பட்ட பகுதி மக்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசிச் சென்ற பிறகும், உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஒரு சிலர் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுகின்றனர் என்று தி.மு.க. நிர்வாகிகள் கூறினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ம.க. நிர்வாகிகள் பல மாதங்களாக குடிநீருக்காக முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று அவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவொருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி கொண்டனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எந்த அரசியல் கட்சியினரும் வரவேண்டாம். நாங்களே போராடி குடிநீரை பெற்றுக் கொள்கிறோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story