நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 80,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 80,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 12 Sept 2021 11:37 PM IST (Updated: 12 Sept 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்:
சிறப்பு முகாம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ளும் வகையில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் என 620 இடங்களில் நிலையான முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 80 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
80,630 பேருக்கு தடுப்பூசி
தடுப்பூசி போடும் பணியில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மொத்தம் 893 செவிலியர்கள், 360 தன்னார்வாலர்கள், 1,400 பள்ளி ஆசிரியர்கள், 160 சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டு இருந்தனர். நகர்புறங்களை பொறுத்த வரையில் பொதுமக்கள் வருகை சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் கிராமபுறங்களில் பொதுமக்கள் காலை முதலே மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொண்டதை பார்க்க முடிந்தது.
மோகனூர், சேந்தமங்கலம் பகுதிகளில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் எலச்சிபாளையம் பகுதியில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் 80,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்
இதற்கிடையே பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கந்தசாமி கண்டர் தொடக்கப்பள்ளி, நல்லியாம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்சாத்தம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனருமான வீரராகவராவ், கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story