காட்பாடி பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து


காட்பாடி  பாத்திரக் கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 12 Sept 2021 11:40 PM IST (Updated: 12 Sept 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

காட்பாடி

காட்பாடி பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பாத்திரக் கடையில் தீ விபத்து

வேலூர் மாநகராட்சி காட்பாடி வள்ளிமலை சாலையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடை உள்ளது. இங்கு பர்னீச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடையும் செயல்பட்டு வருகிறது. இதில் பாத்திரங்கள், பெயிண்டு, சோபா செட்டுகள், மர சாமான்கள், நாற்காலிகள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், டி.வி, உள்ளிட்ட பல்வேறு எலக்ட் ரானிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். 

இதன் அருகிலேயே பொருட்கள் வைக்கக்கூடிய குடோன் ஒன்றும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் பாத்திரக் கடையில் நேற்று காலை சுமார் 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் கடை முழுவதும் எரியத் தொடங்கியது. அருகில் இருந்த குடோனிலும் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

எரிந்து நாசம்

இதனைக் கண்ட பொதுமக்கள் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இருந்தாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் ேவலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீ விபத்து நடந்த இடத்தை வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story