புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் பூட்டிக்கிடந்ததால் அவர்கள் வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் பூட்டிக்கிடந்ததால் அவர்கள் வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.
புன்னைநல்லூர் மாரியம்மன்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக ஆவணி மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் காணப்படும்.
இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நள்ளிரவு முதலே நடந்து கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவில்களில் கூடுவதை தவிர்க்க தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்துக்கு தடை
இதனால் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களிலும் பக்தர்கள் வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த 3 வாரமாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்றும் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளையும் கோவில் முன்பே நடத்தினர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனையும் கோவிலில் செலுத்தி விட்டு சென்றனர்.நேற்று ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் அதிக அளவில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் கோவிலின் முன்பு மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி பின்னர் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் முன்பு விளக்கேற்றினர்
இதே போல் கோவிலுக்கு பெண் பக்தர்கள் கோவில் முன்பு விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்தனர். நேற்று தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் நடந்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story