குமரியில் நீட் தேர்வை 3 ஆயிரத்து 927 பேர் எழுதினர்


குமரியில் நீட் தேர்வை 3 ஆயிரத்து 927 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Sep 2021 8:40 PM GMT (Updated: 12 Sep 2021 8:40 PM GMT)

கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 7 மையங்களில் 3 ஆயிரத்து 927 பேர் நீட் தேர்வை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 215 பேர் தேர்வை எழுதவில்லை.

நாகர்கோவில்:
கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 7 மையங்களில் 3 ஆயிரத்து 927 பேர் நீட் தேர்வை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 215 பேர் தேர்வை எழுதவில்லை.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதற்காக குமரி மாவட்டத்தில் மொத்தம் 7 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் 4,142 பேர்  தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதாவது மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நீட் தேர்வானது நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. 
முன்னதாக மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை காட்டிய பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக வரிசையாக வட்டம் வரையப்பட்டு இருந்தது. அந்த வட்டத்தில் மாணவ-மாணவிகள் அணிவகுத்து நின்றனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசரும் வழங்கப்பட்டது. 
முக கவசம் அணிந்து
சில மாணவர்கள் வெயிலில் காத்திருந்ததால், அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தபோது, அதிகமாக இருந்தது. அந்த மாணவர்களை சிறிது நேரம் நிழலில் அமர வைக்கப்பட்டு, பின்னர் வெப்ப நிலைபார்த்து விட்டு சீரானதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முக கவசத்தை மாணவ- மாணவிகள் அணிந்தபடி தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதோடு அனைத்து மாணவ - மாணவிகளும் கையுறை அணிந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் கையில் 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி திரவம், வெளிப்படையான தண்ணீர் பாட்டில், தேர்வுக்கு தேவையான ஆவணங்களை கொண்டு சென்றனர்.
219 பேர் எழுதவில்லை
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்துக்குள் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்கள். பின்னர் மாணவர்கள் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து தேர்வு மையத்தின் மெயின் நுழைவு வாசல் மூடப்பட்டது. 
மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களது வருகைக்காக பெற்றோர் தேர்வு மையத்தின் அருகே காத்திருந்தனர். இதனால் தேர்வு மையம் முன் ஏராளமானவர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்ததை காணமுடிந்தது. 
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று  3 ஆயிரத்து 927 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 1,163 பேரும், மாணவிகள் 2,764 பேரும் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில்  215 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை. 

Next Story