நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது


நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது
x
தினத்தந்தி 13 Sept 2021 2:20 AM IST (Updated: 13 Sept 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார்.

ராஜபாளையம், 
நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார். 
அமைச்சர்கள் ஆய்வு 
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
அப்போது தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், சீனிவாசன், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் உடனிருந்தனர். 
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
தென் மாவட்டங்களிலேயே அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. 
நீட் தேர்வு 
விருதுநகர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி கூடுதலாக 8 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி ேபாட வந்தவா்களின் தொலைபேசி எண்களை குறித்து வைத்து, அடுத்த முகாமில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஊசி போடப்படும். 
தமிழகத்தில் நேற்று இரவு வரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சம் ஆகும். நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் கொள்கை.
 நீட் தேர்வு தமிழகத்தில் நடக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கொள்கை. இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வை பொறுத்தவரை இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள். நேற்று சேலத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது என்ற வருத்தத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
தீர்மானம் 
2017-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு அளித்தாா்.
அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அந்த தீர்மானத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
தமிழக சட்டசபையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா நாளை (அதாவது இன்று) நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். ஆதலால் இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு நீட் தொல்லை இருக்காது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story